''நாங்கள் காதலிப்பது உண்மை" சிம்பு - ஹன்சிகா திடீர் அறிவிப்பு : DAILYTHANTHI


‘பெற்றோர்கள் சம்மதத்துடன் நடிகை ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்வேன்’’ என்று நடிகர் சிலம்பரசன் கூறினார்.

காதல்
சிலம்பரசனும், ஹன்சிகாவும் ‘வாலு,’ ‘வேட்டை மன்னன்’ ஆகிய 2 படங்களில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இரண்டு பேரும் நெருக்கமாக பழகி வருவதாகவும் பேசப்பட்டது. ஹன்சிகா வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும்போதும் சரி, சென்னையில் இருந்து வெளியூருக்கு போகும்போதும் சரி, விமான நிலையத்தில் வரவேற்பதும், வழியனுப்புவதும் சிலம்பரசன்தான்.

இவர்களின் காதல் விவகாரம் இரண்டு பேரின் பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. சிலம்பரசனின் தந்தை டைரக்டர் டி.ராஜேந்தர், மகனின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார். ‘‘ஹன்சிகாவை என் மகன் சிலம்பரசன் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதை எதிர்க்க மாட்டேன்’’ என்று அவர் கூறினார்.

நட்பாக... 
 இந்த நிலையில் ஹன்சிகா, ஐதராபாத்தில் திடீர் பேட்டி அளித்தார். அதில், ‘‘சிலம்பரசனை நான் காதலிக்கவில்லை. நாங்கள் இருவரும் நட்பாகத்தான் பழகி வருகிறோம்’’ என்று அவர் கூறியிருந்தார். நடிகர்–நடிகைகள் முதலில் தங்கள் காதல் மற்றும் திருமண செய்திகளை மறைப்பதும், பின்னர் வேறு ஒரு காரணத்துக்காகவே மறைத்தேன் என்று சொல்வதும் சகஜம்தான். இதற்கு பல நட்சத்திர ஜோடிகளை உதாரணமாக கூறலாம். 

ஹன்சிகாவின் பேட்டி, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 சிலம்பரசன் பேட்டி 
இதைத்தொடர்ந்து சிலம்பரசன் இன்று காலை லண்டனில் இருந்து தொலைபேசி மூலம் ‘தினத்தந்தி’ நிருபருடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– ‘‘நானும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் மிக தீவிரமாக காதலித்து வருகிறோம். உயிருக்கு உயிராக பழகி வருகிறோம். நான், ஹன்சிகாவுடன்தான் இருக்கிறேன். என்னுடன், ஹன்சிகாதான் இருக்கிறார். நாங்கள் பிரிந்து விட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.

திருமணம் உறுதி 
என் பெற்றோர்கள் சம்மதத்துடன், நான் ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்வேன். எங்கள் இருவருக்கும் திருமணம் நடப்பது உறுதி. அடுத்த ஆண்டு (2014–ல்) எங்கள் திருமணம் நடக்கும். அஜித்–ஷாலினி எப்படி சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்து காட்டுகிறார்களோ, அதேபோல் நானும், ஹன்சிகாவும் சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம்.’’ இவ்வாறு சிலம்பரசன் கூறினார். 

ஹன்சிகா பேட்டி 
சிலம்பரசன் பேட்டி பற்றி ஹன்சிகாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:– ‘‘நானும், சிலம்பரசனும் காதலிப்பது உண்மைதான். சில நிர்ப்பந்தங்கள் காரணமாகவே எங்கள் காதலை மறைத்து வந்தேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்திருப்பதும் உண்மைதான். ஆனால், எங்கள் திருமணம் இப்போதைக்கு இல்லை. சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது இன்னும் இருக்கிறது. அதையெல்லாம் சாதித்து முடித்து விட்டு, சிலம்பரசனை திருமணம் செய்து கொள்வேன்.’’ 

 மேற்கண்டவாறு ஹன்சிகா கூறினார். 
Published In DAILY THANTHI Tamil News Paper Dated 21-JULY-2013
CONTACT ADMIN : youngthala@gmail.com