ஆன்மிகம் ஃபர்ஸ்ட்! சினிமா நெக்ஸ்ட்!

இளமையின் அடையாளமாக… இன்னும் பக்குவமாக… சிம்பு. தனது திருவிளையாடல்களை நிறுத்திவிட்டு நிஜமான ஆட்டத்திற்கு இப்போதுதான் சிம்பு ரெடி. மாசிலாமணி தெரு புது வீடு, ரசனையும் அழகுமாய் கொஞ்சுகிறது. சிரிக்க மறக்காத உதடுகளோடு… இந்தப் பேட்டியில் பார்த்தது புத்தம் புது சிம்பு! 

‘‘ஒவ்வொரு நாளும் ‘இது நம்ம ஆளு’ பற்றி விதவிதமாய் செய்திகள். அதில் இருக்கிற உண்மை என்ன சிம்பு?’’ 

‘‘பாண்டிராஜ் சார் நேஷனல் அவார்டு வாங்கினவர்… கதை கேட்டதும் சம்மதிச்சேன். திருமணமாகப் போகும் ரெண்டு பேருக்கும் கல்யாணம் வரைக்கும் சில விஷயங்கள் நடக்கும்ல, அதுவே முழுப்படமா இதுவரை வந்ததில்லை. நானும் நயன்தாராவும் நடிக்கப் போறோம்னு சொன்னதுமே ‘திரி’ கிள்ளிப் போட்ட மாதிரி ஆகிருச்சு. லைட்மேன், அங்கே வந்தா நகராமல் நின்னு பார்க்கிறார். ஆடியன்ஸும் நல்லாப் பார்ப்பாங்க. எனக்கு சந்தேகமேயில்லை. எல்லாருமே பெரிய ஆர்ட்டிஸ்ட். நயனும் பிஸி. இதில் தாமதமாக நம்பத் தகுந்த காரணங்கள் இருக்கு. 

கிடைச்ச 20 நாள் கேப்ல கிராப் வெட்டினேன். ‘அய்யோ! படம் அவ்வளவுதான். கன்டினியூட்டி போச்சு’ன்னு செய்திகள். அய்யா, என் ஹேர்கட்டை கொஞ்சம் திருத்தினா, அதுதான் ‘இது நம்ம ஆளு’ க்ளைமாக்ஸ் லுக். போதுமா? ‘யோவ், இது என் படம்யா… உங்களுக்கு என்னய்யா பிரச்னை?’ன்னு கத்தத் தோணுது. ‘வாலு’வும் பின்னி எடுக்கிற மாதிரி வந்திருக்கு. ‘அந்த’ சமயத்தில் எடுத்த படமா… நானும், ஹன்சிகாவும் செம கெமிஸ்ட்ரியில் இருக்கோம். சந்தானமும், நானும்… சும்மா கலகலன்னு பறக்கும் படம். எனக்கு ரெண்டு படங்களும் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு.’’

‘‘ஆனாலும், ரெண்டு வருஷம் இடைவெளி விடுவதற்கு நியாயமே இல்லையே..?’’

‘‘இந்த ரெண்டு வருஷத்துல எனக்கு எவ்வளவோ நடந்தது. நான் ரொம்ப மாறியிருக்கேன். முதலில் என்னை மற்ற நடிகர்களோடு தயவுசெய்து ஒப்பிடாதீங்க. அதற்காக ‘நான் கிரேட்’னு சொல்ல வரல. மத்தவங்க 24 வயதில் வந்திருப்பாங்க. நான் ஒன்பது மாதக் குழந்தையா இருக்கும்போதே நடிக்க வந்துட்டேன். மத்த நடிகர்கள் ஸ்கூல் போய்க்கிட்டு இருக்கும்போது, நான் இந்தப் பக்கம் எக்ஸாமுக்கும் படிச்சேன்… அப்பா டயலாக்கையும் படிச்சேன். 14 வயது வரைக்கும் தொடர்ந்து நடிச்சேன். 16 வயசிலேயே ஹீரோ. முப்பது வருஷம் தொடர்ந்து வேலை செய்திருக்கேன். எனக்காக ரெண்டு வருஷம் எடுத்துக்கக் கூடாதா? அவ்வளவு சீக்கிரம் மக்கள் மனசிலிருந்து என்னை எடுத்திட முடியாது. எப்படி முன்னுக்கு வந்தோம்னு தெரியாதவன், திடீர்னு பணத்தைப் பார்த்தவன், புகழைப் பார்த்தவங்களுக்குத்தான் பிரச்னை. அவன்தான் பயப்படணும்… எனக்கு அந்தப் பிரச்னையே இல்லை. நான் கஷ்டப்பட்டு, அனுபவப்பட்டு, அடிபட்டுதான் வந்தேன். எப்படி விழுந்தாலும், எனக்கு ஏறத் தெரியும். இன்னும் ரெண்டு வருஷம் ஆனாலும், இன்னும் கீழே போனாலும் திரும்ப வருவேன்!’’

‘‘ஏன் திடீர்னு இமயமலைக்கெல்லாம் டிரிப்..?’’ 

‘‘நான் நிறைய மாறிட்டேன், ‘நான் யார்… இந்த உலகத்துக்கு எப்படி, ஏன், எதற்காக வந்தேன்’னு கேள்விகள் உள்ளுக்குள்ள எழுந்துக்கிட்டே இருக்கு. உண்மையிலேயே நான் சிம்புதானான்னு தோணுது. இமயமலையெங்கும் துளி அடையாளம் இல்லாமல் திரிஞ்சேன். அதுக்கு முன்னே நான் மெஷின் மாதிரி ஆகிப் போயிருந்தேன். சினிமாவே எல்லாமுமா இருந்துச்சு. சாதாரண விஷயம் எல்லாத்தையும் இழந்திருக்கேன். சுதந்திரம் இல்லை. ஒரு சிறுவனா இருந்த ஞாபகம் கூட இல்லை. பத்துப் பேரோட இருந்தாலும் தனிமையில இருந்தேன். எல்லாமே என்கிட்ட இருந்தது… கேர்ள் ஃபிரண்ட் கூட அப்ப இருந்தா. நான் ஹீரோ… அப்படியும் தனிமை. மெல்ல ஆன்மிகத்தில் வர ஆரம்பிச்சேன். பைபிள், குரான், கீதை, மெட்டா பிஸிக்ஸ், டி.ஏன்.ஏன்னு கலந்து கட்டி படிக்க ஆரம்பிச்சிட்டேன். 

சமீபத்தில் 8 மணி நேரம் தியானத்தில் இருந்தேன். வீட்டில் அம்மா பயந்துட்டாங்க. இந்த மக்களுக்கு ஏதாவது செய்யணும்னு எனக்குத் தோணுது. என் கடவுளுக்கு முகம் கிடையாது. ஒரு நண்பனிடம் தோளில் கை போட்டு பேசுற மாதிரி நான் கடவுள்கிட்ட பேசுறேன். எனக்கு ஒரு காலத்தில், ‘ரஜினி சார் மாதிரி வரணும்… சூப்பர் ஸ்டார் ஆகணும்’னு கனவு இருந்தது. இந்த ஆன்மிகம் கை வந்த பிறகு, சினிமா அடுத்ததுதான்!’’

‘‘என்னங்க… சினிமாவை விட்டுடுவீங்களா..?’’ 

‘‘இதான் ஆன்மிகத்தைப் பற்றின தவறான கருத்தா இருக்கு. ஆன்மிகத்தில் வந்துட்டா கல்யாணம், தாம்பத்யம், தண்ணியடிக்கிறது, அசைவம் கூடாது என்பதல்ல. 24 மணி நேரமும் காவி உடையில் இருக்கிறதும் அவசியமில்லை. கடவுளை நோக்கிச் செல்ல அநேக வழிகள். அதனால், சினிமாவை விட மாட்டேன். 

என்னை நம்பின ரசிகர்களுக்கு என்னால ஏமாற்றம் தர முடியாது. பங்களா, கார் இருக்கு. அப்பா நல்லா சேர்த்து வச்சிருக்கார். நாளைக்கு என் குழந்தை, குட்டிகளோட ஒரு தனித் தீவில் வாழணும்னா கூட என்கிட்ட காசு இருக்கு. ஆனா, இப்ப ரீல் லைஃபில் மக்களை எப்படி சந்தோஷப்படுத்துறேனோ, அதை ரியல் லைஃபில் செய்வதுதான் எனக்கு அடுத்த முப்பது வருஷ கனவு!’’

‘‘அரசியலுக்கு வரப் போறீங்களோ?’’

‘‘பார்த்தீங்களா… உடனே அரசியல்ங்கிறீங்க. எனக்கு அரசியல் தெரியாது… புரியாது… சிம்பு அரசியலுக்கு வர்றதெல்லாம் காமெடி. ‘சினிமாவை மீறி மக்களுக்கு என்ன பண்ணலாம்’னு யோசிச்சுக்கிட்டே இருக்கேன். அதனால சினிமா பத்தி என்கிட்ட எதுவும் கேக்காதீங்க. ‘நீ பெரியவனா, நான் பெரியவனா?’ன்னு என்னை இழுத்து விடாதீங்க. நான் நார்மல் மனுஷன். யாரும் என்னை ஃபாலோ பண்ண வேண்டாம். உங்க எல்லாருக்குள்ளும் ஒரு லீடர், குரு இருக்கார். அவர் சொல்றதைக் கேளு! உனக்கு எதுக்கு சிம்பு? ரசிகர்கள் என்னை பின்பற்ற வேண்டாம். சொல்லிட்டேன்!’’ 
‘‘நீங்களா பேசுறது..!’’ ‘‘ ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’, ‘வேட்டை மன்னன்’, கௌதம் மேனன் படம்… எல்லாம் வரும். நல்லா வரும். ரசிகர்களுக்கு வேண்டியது கிடைக்கும். எனக்கு? ‘சிவாஜி’ படத்தில் ஒரு ரூபாய் காசோட டீக்கடையில் ரஜினி சார் இருப்பாரே… அப்படியொரு மனநிலை இப்ப எனக்கு. 

மதத்தை, நாட்டை, இனத்தைப் புரிஞ்சிக்கிட்டவங்க, மனுஷனைப் புரிஞ்சிக்காம போனதேன்? ஒரே நாடுங்கறோம்… தண்ணி கொடுக்க மாட்டேங்கிறான். நடு ரோட்டில் குழந்தைகளை வச்சுக்கிட்டு அரிவாளால் வெட்டுறான்! பச்சைக் குழந்தைகளின் மீது ‘பாம்’ போடுறான். மனிதர்கள் மீதான அன்பெல்லாம் எங்கே போச்சுங்க?’’ ‘‘அதிகமா கிடைச்சு எல்லாம் திகட்டிடுச்சா?’’‘

‘30 வருஷமா நான் வாழவே இல்லை. இப்பதான் வெளியில வந்தேன். இப்ப நான் பழைய சிம்பு இல்ல. நடிக்கிறேன்…. நான் ரேஸில் இல்லை. ஏன்னா… நான் ஆன்மிகத்தில் இருக்கேன்!’’

‘‘கல்யாணம் உங்களை மாத்துமோ?’’

‘‘ இப்படி கடவுள் ஞானத்தைக் கொடுத்த பிறகுதானே, கடைசியா வந்த துணையையும் வேண்டாம்னு சொன்னேன்!’’

‘‘நிறைய காதல் தோல்வி காரணமா?’’

‘‘கத்தியால் குத்துப்பட்டு குடல் எல்லாம் வெளியே வந்து, மீண்டும் அதை எடுத்து மறுபடியும் தச்சு, மறுபடியும் குத்துப்பட்டு… அதெல்லாம் முடிஞ்சிருச்சே. இப்பதான் தெளிவா இருக்கேன்!’’

 - நா.கதிர்வேலன்

Published In KUNGUMAM Weekly Tamil Magazine Dated 25-8-2014
CONTACT ADMIN : youngthala@gmail.com