எனக்கும் இருக்கிறது கருத்து சுதந்திரம் : STR

எனக்கும் இருக்கிறது கருத்து சுதந்திரம் : ட்விட்டர் எதிர்ப்பாளர்களுக்கு சிம்பு பதில்
கெளதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் அஜித், அருண் விஜய், அனுஷ்கா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'என்னை அறிந்தால்' நேற்று (வியாழக்கிழமை) வெளியானது. அப்படம் பார்த்தவர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்கள். 

அஜித் ரசிகராக வலம் வரும் நடிகர் சிம்பு, படம் வெளியானவுடன் இயக்குநர் அட்லீ, அனிருத் ஆகியோருடன் இணைந்து குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் 'என்னை அறிந்தால்' பார்த்தார். அதற்கு பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் "ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல தமிழ்ப் படம் பார்த்துள்ளேன். 'தல' அற்புதமாக நடித்துள்ளார். தல ரசிகர்களுக்கு சரியான விருந்து. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்" என்று சிம்பு கருத்து தெரிவித்திருந்தார். 

சிம்புவின் இந்தக் கருத்தால் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை உண்டானது. 'சிம்பு மனநலம் பாதிக்கப்பட்டவர்' என்று சாடும் வகையிலான ஹெக்டேக் ஒன்றை உருவாக்கி இந்தியளவில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள். 

இந்த சர்ச்சை குறித்து சிம்புவிடம் கேட்டேன். அதற்கு, "நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. முன்பு தொடர்ச்சியாக நல்ல படங்கள் வந்து கொண்டிருந்தன. இப்போது எப்போதாவதுதான் நல்ல படங்கள் வருகின்றன. 

சினிமாவில் நிறைய அழுத்தம் இருக்கிறது. 'யு' சான்றிதழில் மட்டும்தான் படம் இருக்க வேண்டும், காமெடியாக இருக்க வேண்டும், பேய் படம் என்றால் பார்க்கிறார்கள் இப்படி நிறைய விஷயங்கள் இருக்கிறது. 

பணம் போடுகிற தயாரிப்பாளர்கள் அவ்வளவு பணம் செலவு செய்கிறார்கள். அந்தப் பணம் திரும்ப வருவதற்கான சூழ்நிலையும் தற்போது குறைவாக இருக்கிறது. நமது கட்டமைப்பு அந்த மாதிரி இருக்கிறது. 

இந்த மாதிரியான நெருக்கடியான சூழலில், எல்லா படங்களிலும் குறைகள் என்பது இருக்கத்தான் செய்யும். குழந்தைகள் தவறு செய்யத்தான் செய்கிறது, அதற்காக அக்குழந்தையை அடித்து, துன்புறுத்தி, மிரட்டி சொல்லிக் கொடுப்பதில்லை. அக்குழந்தையிடம் நாம் எப்படி சொல்லிக் கொடுப்போம், அதுதான் என்னுடைய கருத்து. 

'ஐ' படம் எவ்வளவு பிரம்மாண்டமாக ஒவ்வொரு ஃப்ரேமையும் எடுத்திருந்தார்கள். அதில் சில குறைகள் இருக்கத்தான் செய்யும், அதை விட்டுவிட்டு போகலாம். இல்லையென்றால் சொல்கிற விதம் என்று ஒன்று இருக்கிறது. இது 'கேவலம்', 'வேலைக்கு ஆகாது' என்று சொல்லும்போது அவ்வளவு பணம் போட்ட தயாரிப்பாளர் என்ன ஆவார்? 

இதை நாம் சொன்னால், உடனே எங்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா என்கிறார்கள். 'அஞ்சான்' படம் சரியாக போகவில்லைதான், இயக்குநர் லிங்குசாமி ஏதோ ஒரு இடத்தில் மிஸ் பண்ணிட்டார். உடனே லிங்குசாமியை அவ்வளவு கிண்டல் செய்தார்கள், அப்போது நான் ஏதாவது கேட்க முடியுமா, சொன்னேனா... இல்லையே. அது அவங்களோட கருத்து சுதந்திரம்தானே. 

அதுபோலவே எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. நான் என் மனதில் தோன்றிய கருத்தைச் சொன்னால், அதை பெரிய பூகம்பமாக உருவாக்குகிறார்கள். அதான் ஏன் என்று தெரியவில்லை" என்றார் நடிகர் சிம்பு. 

Published in THE HINDU (Tamil) Daily Tamil News Paper Dated 07-02-15

0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com