முதல் மூணு இடத்திற்குள் சிம்பு வரணும்...


இன்னிக்கு 11 மணிக்கு வர்றீங்களா? ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் பேசலாம்!’’ என்றார் டைரக்டர் கௌதம் வாசுதேவ் மேனன். ஆக்‌ஷனும், காதலுமாக படங்களில் கவிதை சொல்லி இதயம் தொட்ட மனிதர், இப்போது களம் இறங்கியிருப்பது

‘அச்சம் என்பது மடமையடா’வுக்காக. ஒவ்வொரு முறையும் கௌதமின் படங்களுக்கான தீவிரமும், எதிர்பார்ப்பும் சமகால இயக்குநர்களில் ஒரு சிலருக்கே வாய்த்திருக்கிறது. அனுபவத்தின் வாசலில் அமர்ந்து அருமையாகப் பேசுகிறார் கௌதம். ‘‘

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை ‘விண்ணைத் தாண்டி வருவாயா’வைத் தாண்டி எதிர்பார்ப்பாங்க போலிருக்கே!’’ 

‘‘இன்னும் 10 நாள் வேலை பாக்கியிருக்கு. சுழற்றிப் போட்ட மழையால் தேதிகள் கிடைக்காம போச்சு. நேர்மையா சொல்லணும்னா, படம் நல்லா வந்திருக்கு. ரொம்பவும் வித்தியாசமா இருக்காது. என்னுடைய பாணியிலிருந்து கொஞ்சம் வேற மாதிரி வந்திருக்கேன். ஒரு ஃப்ரண்ட்ஷிப், அப்புறம் ஆக்‌ஷன், கொஞ்சம் வன்முறைனு படம் ஷிஃப்ட் ஆகிப் போயிட்டே இருக்கும். முதல் பாகம் முழுக்க பாடல்களால் நிரம்பியிருக்கு. ஒவ்வொரு பாடலுமே கதையை அடுத்த இடத்திற்கு நகர்த்தும்.

இரண்டாம் பாகம் முழுக்க ஆக்‌ஷன். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’வை விட இது அடுத்த லெவலில் இருக்கும்னு எனக்குத் தோணுது. அது முழுக்க முழுக்க லவ் ஸ்டோரி. இதில் காதலும் ஆக்‌ஷனும் இருக்கு. இந்தப் படத்துக்கு மிகச் சரியான டைட்டில், ‘சட்டென்று மாறுது வானிலை’தான். அந்தத் தலைப்பை தேடிப் போனால் ஏற்கனவே அந்தப் பெயரில் ஒரு படம் ரெடியாகி தயாரா இருக்கு. என் படத்தில் ஹீரோவிற்கு இருக்கிற சூழ்நிலைக்கு, அவன் எல்லாத்தையும் விட்டுட்டுப் போயிடணும். அப்படியொரு பிரச்னைக்கு அதுதான் உடனடித் தீர்வு. ஆனால், அவன் பயப்படாமல் இறங்கி நிக்கிறான். அவன் வாழ்க்கை நிறைய மாறுது. அந்த ஆரம்பமும் மாறுகிற இடங்களும் நிச்சயம் புதுசா இருக்கும்!’’

‘நிறைய நாட்கள் எடுத்துக்கிட்ட மாதிரி இருக்கு...’’ 

‘‘தேவையான டைம் மட்டுமே எடுத்துக்கிட்டேன். கொஞ்சம் நிதிப் பிரச்னை இருந்தது உண்மை. இப்ப அதைத் தாண்டி படம் வந்துடுச்சு. அடுத்த வருஷம் நிச்சயம் நாலு படம் பண்ணிடுவேன். பேக் டூ ஃபார்ம்னு சொல்ல வரலை. இதுதான் எனக்குத் தெரியும். பிடிக்கும். என் படத்தில் என் முழு பலத்தையும் பிரயோகிப்பேன். சிம்புவின் படம், புரொடியூஸரின் படம் என நினைப்பதே கிடையாது. என்னுடைய சினிமானு உழைப்பேன். அது என்னைத் தாண்டித்தான் மத்தவங்களின் பெயரை பாதிக்கும்!’’ 

‘‘இன்னமும் காதல்னா அதைப் பெருமிதமா நினக்கிறவங்க இருக்காங்களா?’’  

‘‘சினிமாவில் இருக்கிற லவ்தான் மக்கள்கிட்ட இருக்குனு நான் நம்பவே மாட்டேன். ரஹ்மான், கௌதம், சிம்புவிற்கு இளைஞர்கள் மட்டுமில்லாம வேறொரு ஏஜ் குரூப்பும் வருவாங்க. அவங்க எல்லாருக்குமே இந்த லவ் புரியும், பிடிக்கும். நான் எந்தச் சமயத்திலும் கீழ்த்தரமா இறங்கி வேலை பார்க்கிறது கிடையாது. என் காதலில் கவிதை இருக்கத்தான் செய்யும். இப்படி ஒரு காதலை வச்சுக்கிட்டு லோக்கலா கூட இறங்கி பண்ணலாம். அப்படிச் செய்தால் கூட நான் யாரையும் அசிங்கப்படுத்த மாட்டேன்!’’ 

‘‘இவ்வளவு பிரச்னைகளோடு இயங்குறதே கஷ்டமா இல்லையா?’’ 

‘‘எல்லாமே முடிஞ்சுடுச்சு. இப்ப பிரச்னை மழைதான். ஆனால், பிரச்னை யாருக்குத்தான் இல்லை. சூப்பர் ஸ்டாரிலிருந்து கீழே இருக்கிறவங்க வரை இருக்கு. அதைத் தாண்டி மெருகேத்தி வந்திருக்காங்க. மணிரத்னத்தின் ‘குரு’வில ‘நம்மளைப் பத்தி யாராவது நோண்டிக்கிட்டே இருந்தா, நாம நல்லது பண்ணிக்கிட்டு இருக்கோம்னு அர்த்தம்’ என ஒரு டயலாக் வரும். நானும் கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக்கிட்டு நிறைய நிலம் வாங்கி, வீடு கட்டிக்கிட்டு இருக்கலாம். ஆனால் நான் அப்படி இல்லை. இருக்கிறது நடைமுறை வாழ்க்கைக்குப் போதும். அப்படி இல்லாம இருந்தால் கூட அதை சமாளிக்கத் தெரியும். ‘துருவ நட்சத்திரம்’ ட்ராப் ஆனப்போதான் உச்சகட்ட பிரச்னை. எல்லா பக்கமும் நெருக்கறாங்க. தயாரிப்புக்காக நிறைய பணம் வாங்கி, உடனே திரும்பிக் கொடுக்க வேண்டியதாகிடுச்சு. 

ஏழெட்டு மாதம் அப்படியொரு அவதி. அதுக்குப் பிறகு அஜித் சார் படம் வந்து, சம்பளம் வாங்கி, அப்படி அப்படியே கொடுத்து அடுத்த கட்டத்திற்கு போயிட்டேன். வெங்கட்பிரபுவைக் கூப்பிட்டு ஒரு படம் பண்ணுங்கன்னு சொல்லி தயாரிக்கிறேன். அதுமாதிரி செல்வராகவனிடம் இருக்கிற கதையைக் கேட்டு தயாரிக்கிறேன். ‘ஒன்றாக’னு ஒரு கம்பெனி ஆரம்பிச்சிருக்கேன். இதோ, மிஷ்கின்கிட்டே கூட கேட்கணும். என்னுடைய ஸ்டைலில் படம் எடுக்க, முதல் பிரதி அடிப்படைதான் ஈஸியா இருக்கு. ஸ்பாட்ல ‘அப்படிப் பண்ணக்கூடாது, இப்படிப் பண்ணக்கூடாது’னு யாரும் சொல்லக் கூடாது. நான் கேட்கிறது கிரியேட்டிவ் சுதந்திரம்தான். அதற்காகத்தான் கொஞ்சம் காலம் பிடிக்குது. இதெல்லாம் அடுத்த இடத்திற்கான நகர்தல்னுதான் எடுத்துக்கணும்!’’
‘‘சூர்யா கூட மறுபடி படம் பண்ணப் போறீங்க போல?’’ 

‘‘அவர் ஆரம்பத்தில் சொன்னதற்கு நான்தான் ரொம்பநாள் கழித்து ரியாக்ட் செய்தேன். நெருக்கமா இருந்தவங்க விலகினால் ரொம்ப பாதிக்கப்பட்டு பேசுவோம் இல்லையா, அதுதான் நடந்தது. இப்ப ரெண்டு மூன்று தடவை சந்திச்சு பேசிக்கிட்டே இருக்கோம். எல்லாம் சுமுகமாவே இருக்கு. ஏதாவது ஒரு நல்ல ஸ்கிரிப்ட் அவருக்கு சொல்ல முடிஞ்சதுன்னா, அவருக்கு டேட்ஸ் கைவசம் இருக்குன்னா, சேர்ந்து படம் பண்ணலாம் என்ற ஐடியா இருக்கு.’’

‘‘நல்ல சினிமாவிற்கான மாற்றங்கள் யாரிடமிருந்து ஆரம்பிக்கணும்?’’

‘‘சினிமான்னா அது ரைட்டர், டைரக்டர் மீடியம்தான். ஆனால், அதற்கு வலு சேர்க்க... எல்லாருக்கும் போய்ச் சேர்க்க ஸ்டார்ஸ், ஆக்டர்கள் தேவை. ஆர்ட்டிஸ்ட்கிட்ட பேசி சமாதானப்படுத்தும் பொறுப்பு டைரக்டர்கள்கிட்ட இருக்கு. மாற்றம் அங்கேதான் ஆரம்பிக்குது. நாம வித்தியாசமா சொல்லி, அதை அவங்க புரியலைனு சொல்லிட்டா இன்னும் ஒண்ணு புதுசா தொடங்கத்தான் வேணும். ஒரு உதாரணமா சொல்றேன்... அஜித்தோட, ‘என்னை அறிந்தால்’ கதையில் இன்னும் மாஸ் விஷயம் இருந்தது. நானே ‘பண்ணுங்க’னுதான் சொன்னேன். ஆனா, ‘அதை நீங்க பண்ணக் கூடாது... பண்ணினால் நான் உங்களை மாத்திட்டேன்னு சொல்லிடுவாங்க’னு அஜித் மறுத்துட்டார். என்னைப் பொறுத்தவரை இது மாற்றம்தான். அந்தக் கதைக்கு எது தேவையோ அதைத்தான் செய்தோம். இன்னும் சேர்த்திருந்தால் இன்னும் பெரிய லெவலுக்குக்கூட அந்தப் படம் போயிருக்கலாம்!’’ 

‘‘சிம்புவை நீங்க எப்பவும் உயர்த்திப் பிடிப்பீங்களே..?’’  

‘‘அவர்கிட்ட எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையே. என்னைப் பொறுத்தவரை சிம்புவின் திறமைக்கு, இன்னும் அவர் நிறையப் பேரைப் போய்ச் சேரணும். எப்படி மெருகேத்தினாலும் அப்படியே உள்வாங்குற விசேஷம் அவரோடு சேர்ந்திருக்கு. அவருக்கு கேமரா எங்க வருதுனு நடிக்கும்போதே தெரியும். 1,2,3ல இருக்க அவருக்கு தகுதி இருக்கு. சிம்பு மாதிரி ஒரு நடிகருக்கு, இந்த இடம்தான் தருவோம்னு யாரும் சொல்லிடக் கூடாது. ‘நீங்களா, எவ்வளவு வேணுமோ எடுத்துக்கங்க’னு சொல்லணும்... அதுதான் என் விருப்பம்!’’ 

‘‘இப்ப பிடிச்ச நடிகர்கள், டைரக்டர்கள் யாரு?’’ 

‘‘தியாகராஜன் குமாரராஜாவுக்குப் பிறகு அவரோடு அந்த வரிசை நின்னுடுச்சு. நான் கூட பணம் அது இதுனு கமிட் ஆகி அடுத்த விஷயத்தை யோசிப்பேன். அதைக்கூட யோசிக்காமல் அவர் டிராவல் பண்றார். நான் ரசித்த படம், ‘சூது கவ்வும்’. அதுக்குப் பிறகு நலன் குமாரசாமி அடுத்த படத்தோட இன்னும் ரெடியாகலை. ‘நானும் ரவுடிதான்’ ரொம்பப் பிடிச்சது. ‘தனி ஒருவன்’ என்னை பாதித்தது. மோகன்ராஜா ரெண்டு வருஷத்திற்கு முன்னாடி பார்த்து, ‘வித்தியாசமா ஒரு படம் ட்ரை பண்றேன் பிரதர்... பாருங்க’னு சொன்னார். சொல்லி அடிச்சார். எனக்கு தனுஷ், ஜெயம் ரவி இவங்ககிட்ட பணிபுரிய ப்ரியமா இருக்கு. அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் மாதிரி இளைஞர்கள் இன்னும் வந்திருக்கணும். அப்படி யாருமே இல்லை. வந்தால் நல்லாயிருக்கும்!’’ 

- நா.கதிர்வேலன்

Published in KUNGUMAM Weekly Tamil Magazine Dated 14-December-2015 

2 Comments:

Unknown said...

Thalaivan eppovume sema mass yaru padam vanthalum varattum Yenga padam vanthale MRATTUM Athanda yenga thalaivan thala str

vallavan said...

Thalaivan 1st place seekiram varanum.


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com