எனக்கு பிடித்த பெண்கள் : நடிகர் சிம்பு

 ◄◄ REWIND  
 PUBLISHED ON 28-OCTOBER-2014

சென்னை தி.நகரில் உள்ள வீட்டில், ‘உங்களுக்கு பிடித்த பெண்கள்’ என்ற கேள்வியுடன் சிம்புவை சந்தித்தோம். உள் அர்த்தம், வில்லங்கம் எதுவும் இல்லையே என்று சிரித்துக் கொண்டே பேச அமர்கிறார் சிம்பு. “முதல்ல பெண் கடவுளில் இருந்து ஆரம்பிக்கிறேன். என் இஷ்ட தெய்வம் காளி. ஏன்னா, அந்த கோபம், அந்த தைரியம் எனக்கு ரொம்ப பிடிக்கும். பெண்ணாக இருந்தாலும் ஆக்ரோஷமாக இருக்கிற அந்த தெய்வத்தை வழிபடுகிறேன்” என்று சொல்லிவிட்டு தொடர்கிறார்...

உஷா ராஜேந்தர்
ஒரு தாயின் அன்பும், அரவணைப்பும்தான் நல்ல மனிதனை உருவாக்கிறது. ஓபனாக சொன்னால், நான் அம்மா பிள்ளை. என் மனசுல உள்ளதை அவங்ககிட்ட தைரியமாக, மறைக்கமா சொல்வேன். காதல் விஷயம், தம் அடிக்கிற உட்பட எதையும் மறைக்க மாட்டேன். நான் வீட்டுக்கு பயப்படுற பையன் கிடையாது. வெளிப்படையாக இருப்பதால் எங்களுக்குள் பிரச்னை, சண்டை வராது. சினிமா உட்பட அனைத்து முயற்சிகளுக்கும் எனக்கு பக்கபலமாக அம்மா இருக்காங்க. அவங்க நெய் ஊத்தி பிசைந்துகொடுத்தால் அந்த சாப்பாடு அமிர்தமாக இருக்கும். என்னைப் பத்தி வரும் எல்லா செய்திகளையும் அவங்க படிப்பாங்க. எல்லா கிசுகிசுக்களும் அவங்களுக்கும் தெரியும். என்னடா, இவ்வளவு கிசுகிசு வருது. வாராவாரம் ஒரு பெண்ணை காதலிக்கிறேனு எழுதுறாங்களேனு கிண்டல் பண்ணுவாங்க. என் காதலி யாருனு உங்களுக்கு தெரியாதானு சிரிப்பேன். இல்ல, எனக்கே டவுட் வருதுனு பதிலுக்கு அவங்க கமென்ட் அடிப்பாங்க. 

அவங்களுக்கு என்னைப் பத்தி நல்லாவே தெரியும். கஷ்டமான காலத்தில் ரொம்ப சப்போர்ட் பண்ணியிருக்காங்க. என் படத்தை தியேட்டர்ல போய் பார்ப்பாங்க. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ அவங்களுக்கு பிடித்த படம். ‘காளை’ ஏனோ அவங்களுக்கு பிடிக்கலை. லவ் ஸ்டோரி படங்களில் நடி. நீ லவ் பண்ணி நடித்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்குதுனு அட்வைஸ் பண்ணியிருக்காங்க. எனக்கு 30 வயசு ஆகிடுச்சு. உனக்கு பொண்ணு பார்த்து இருக்கிறேன். கல்யாணம் பண்ணுனு பிரஷர் கொடுக்கலை. நேரம் வரும்போது நானே சொல்றேன்னு அவங்கிட்ட சொல்லிட்டேன்.

இலக்கியா
என்னோட தங்கை இலக்கியா. அண்ணன், தங்கைன்னா கண்டிப்பாக சண்டை வரும். ஆனா, எனக்கும் இலக்கியாவுக்கும் சண்டையே வராது. அவளும், குறளரசனும்தான் சண்டை போடுவாங்க. எனக்கு இலக்கியா செல்லத் தங்கை. எனக்கு என்ன வேண்டும் என்பதை முகமறிந்து செய்திடுவாள். இப்பதான் திருமணமாகி புருஷன் வீட்டுக்கு போயிருக்கா. அவ வீட்டை விட்டு செல்லும் போது உண்மையிலே மனசு கலங்கிட்டேன். அவளுக்கும் என்னை பத்தின எல்லா விஷயங்களும் தெரியும். 

நான் காதலிச்ச சமயத்தில் எங்களுக்குள் சண்டை வந்தால், ‘எதிர் பார்ட்டி’ இலக்கியாவுக்குதான் போன் போடுவாங்க. நீ அவங்களுடன் பேசி தொலையேன்னு என்னை செல்லமாக திட்டுவாங்க. யாரையாவது சீக்கிரம் கல்யாணம் பண்ணு, என்னை ப்ரீ பண்ணிவிடுனு சொல்லுவா. திருமணமாகி போனபின் அவளுக்கு நான் நிறைய அட்வைஸ் பண்ணியிருக்கிறேன். இப்ப உள்ள ஆண்கள் இப்படித்தான் இருப்பாங்க. அவங்க மனநிலை இந்த மாதிரி இருக்கும். நீ அதுக்கு தக்கபடி நடந்துகிடணும்னு சொன்னேன். நீ எனக்கு சப்போர்ட்டா, அவருக்கு சப்போர்ட்டானு கேட்டாள், நான் சிரிச்சுகிட்டேன். அண்ணன்னா இப்படித்தான் பேசணும்மானு சொன்னேன். 

இப்ப ஐதராபாத்துல இருக்காங்க. டி.ஆர். மகனுக்கு தங்கச்சி பாசம் பத்தி சொல்லவா வேண்டும்? என்னைப் பற்றிய, என் படங்களை பற்றிய விமர்சனம் அவங்ககிட்டதான் முதல்ல வரும். சில சமயம் திட்டும் விழும். ஏன் இப்படியெல்லாம் நடந்துகிடுறேனு கேட்பாங்க. வெளிநாட்டுக்கு செல்லும்போது இலக்கியாவுக்கும், அம்மாவுக்கு கண்டிப்பாக ஏதாவது கிப்ட் வாங்கிக் கொடுப்பது என் பழக்கம்.

பாட்டி
அப்பா வழி பாட்டி மாயவரத்துல இருந்தாங்க. பேபி அம்மானு கூப்பிடுவோம். சின்ன வயசுல ஊருக்கு போவோம். நான், சித்தப்பா, குடும்ப உறுப்பினர்கள் கலாட்டானு ரொம்ப ஜாலியாக இருக்கும். பாட்டிக்கு என் மேல தனி பிரியம். ரசம் பிரமாதமாக செய்வாங்க. உருண்டை குழம்பு செய்து கொடுப்பாங்க. அந்த மாதிரி இதுவரை சாப்பிட்டதே இல்லை. அம்மாவோட அம்மா வேற டைப். சாந்தோம் பாட்டினு கூப்பிடுவோம். என் அம்மாவோட பாட்டி இஸ்ரேல்காரங்க. வெள்ளைக்காரங்க என்பதால நல்ல கலராக இருப்பாங்க. என் பாட்டியும் பாரினர் மாதிரியே இருப்பாங்க. “நீ, உன் அம்மா, நானெல்லாம் கலராக இருக்கோம். காரணம் என் அம்மா”னு பாட்டி கிண்டல் பண்ணுவாங்க. அடிக்கடி சர்ச்சுக்கு கூட்டிகிட்டு போவாங்க. அங்கே வேஷமெல்லாம் போட்டு மோசஸ், ஜீஸசாக நாடகங்களில் நடிச்சு இருக்கேன்.

திரிஷா
‘அலை’ படத்துல இரண்டுபேரும் சேர்ந்து நடிச்சோம். பள்ளிப் பருவத்தில் இருந்தே எனக்கு திரிஷாவை தெரியும். அப்புறம், ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்துல நடிச்சோம். பொதுவாக பல ஹீரோயின்கள் படத்துக்குபின் தொடர்புல இருக்கமாட்டாங்க. திரிஷா சென்னை என்பதாலும், நல்ல பிரண்ட் என்பதாலும் அடிக்கடி பேசிகிடுவாங்க. பார்ட்டிகள்ல பார்த்துகிடுவோம். எனக்கு இண்டஸ்ட்ரீ பத்தி ஏதாவது டவுட் வந்தால் அவங்களுக்குதான் போன் போடுவேன். ஹீரோயினுக்கு உரிய பந்தா திரிஷாவிடம் கிடையாது. அவ்வளவு எளிமை.

காயத்ரி ரகுராம்
ரகுராம் மாஸ்டர்கிட்ட நான் டான்ஸ் கத்துகிட்டேன். மாஸ்டர் மகள்தான் காயத்ரி. அவங்க பேமிலியில எல்லாரும் எனக்கு பழக்கம். அந்த நட்பு இன்னமும் தொடர்கிறது. சின்ன வயசுல நான் ரொம்ப வாலு. டான்ஸ் படிக்கும்போது பிருந்தா மாஸ்டர் கிள்ளிவிடுவாங்க. காயத்ரி எனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. அதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள்.

ஸ்ரீவித்யா
அப்பா படங்களிலும், என்னுடனும் பல படங்களில் நடிச்சவங்க ஸ்ரீவித்யா. அவங்க என் மேல அவ்வளவு பாசமா இருப்பாங்க. அவங்க வீட்டுக்கு அடிக்கடி போவேன். அவங்களுடன் நடித்த நினைவுகள் இன்னமும் மனசுல பசுமையாக இருக்கு. ‘ஒரு தாயின் சபதம்’ படத்தை மறக்க முடியுமா?

குஷ்பு, ஜோதிகா
ஹாலிவுட்டுல ‘ட்ரூ பேரிமோர்’ என்ற நடிகையை பிடிக்கும். நம்ம ஜோதிகா மாதிரி அந்த நடிகையோட எக்ஸ்பிரஷன்ஸ் நல்லா இருக்கும். ஜோதிகாவையும் எனக்கு பிடிக்கும். அந்த கால ஹீரோயின்களில் குஷ்புவை ரொம்ப பிடிக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு ஹீரோவுக்கும் மார்க் போட்டாங்க. எனக்கு மட்டும் மார்க் போடமாட்டேன்னு சொல்லிட்டாங்க. நான் வளரணும்னு சொன்னாங்க. அது என் மனசை பாதித்தாலும், உங்க வார்த்தை என்னை முன்னேற வேண்டும்னு உற்சாகப்படுத்தியதுனு அவங்ககிட்டேயே சொன்னேன். ‘வருஷம் 16’ படத்தை 100 தடவை பார்த்து இருப்பேன். அந்த பட டயலாக்கை அப்படியே ஒப்பிப்பேன். நான் குஷ்பு ரசிகன்.

ஜெயலலிதா
சினிமா விழாக்களில் மேடத்தை சந்திச்சு பேசி இருக்கிறேன். ரொம்ப ஸ்வீட். தேவையான விஷயங்களை மட்டும் பேசுவாங்க. ஆனா, தெளிவாக, உறுதியாக சொல்லுவாங்க. கட்சியை வழி நடத்துறாங்க, தனி ஆளாக போராடி ஜெயிச்சு இருக்காங்க. எம்ஜிஆர் இடத்தை பிடிச்சு இருக்காங்க.

எஸ். ஜானகி
‘சம்சார சங்கீதம்’ படத்துல ‘ஐ யம் ய லிட்டில் ஸ்டார்...’ என்று பாடி, என்னை பிரபலப்படுத்தியவர் பாடகி எஸ்.ஜானகி. சின்னப் பையனாக இருந்த எனக்கு பக்காவா குரல் கொடுத்தாங்க. அவங்க குரலும், அந்த பாட்டும் இன்னிக்கும் பேசப்படுது. அப்பா படத்துல நிறைய பாட்டு பாடியிருக்காங்க. அடிக்கடி பார்த்து பேசியிருக்கிறேன். அவங்களை பார்க்கும்போது ஒரு பக்தி வரும்.

லதா ரஜினிகாந்த்
எனக்கு இன்னொரு அம்மா மாதிரி லதா மேடம். மூன்றரை ஆண்டுகள் அவங்க வீட்டுலேயே வளர்ந்தேன்னு சொல்லலாம். அவங்களோட ஆசிரமம் ஸ்கூல்லதான் படிச்சேன். அங்கே நடந்த கல்ச்சுரல், நிகழ்ச்சிகளில் என்னை பங்கேற்க வைத்து உற்சாகம் கொடுத்தாங்க. என் திறமையை வெளியே கொண்டு வந்தவங்க லதா மேடம். அங்கே எடுத்துகிட்ட பயிற்சி சினிமாவுக்கு ரொம்பவே கை கொடுத்தது. இன்னிக்கும் அவங்களுடன் பேசுவேன். ஏதாவது பிரச்னைன்னா அவங்ககிட்ட கருத்து கேட்பேன். அம்மா மாதிரியே உரிமையோட அட்வைஸ் பண்ணுவாங்க.

நயன்தாரா, ஹன்சிகா
நயன்தாரா, ஹன்சிகா பத்தி என்னத்த பேச? நான் அவங்க மேல வெச்சிருந்த அன்பு, காதல் உண்மையானது. மதம் மாறுவது மாதிரி, அவங்கதான் மாறினாங்க. நான் அப்படியேதான் இருக்கிறேன். அவங்க எனக்கு ஸ்பெஷல் கிடையாது. அந்த பெண்ணுக்கு கூடுதல் காதல், இந்த பெண்ணுக்கு கூடுதல் அன்புனு நான் பாகுபாடு பார்க்கலை. என் காதல் நிஜம். சரி அதைவிடுங்க. இவங்களை தவிர, நூற்றுக்கணக்கான மறக்க முடியாத ரசிகைகள் இருக்காங்க. படப்பிடிப்பு தளத்துல, பொது நிகழ்ச்சிகளில் அவங்களை தினமும் சந்திக்கிறேன்.
- தினமலர்
Thanks : Menakshi Sundaram

0 Comments:

CONTACT ADMIN : youngthala@gmail.com