'வேட்டை மன்னனின்' ஹைலைட் திரைக்கதைதான்! - இயக்குநர் நெல்சன்





அஜித்துக்கு 'பில்லா', விஜய்க்கு 'போக்கிரி', இப்போ சிம்புக்கு 'வேட்டை மன்னன்'. தடதடக்கிற கேங்க்ஸ்டராக துப்பாக்கியைத் தூக்கியபடி ஆக்ஷனில் இறங்கியிருக்கிறார் எஸ்.டி.ஆர்.


"சூழ்நிலைகளால் சில ஆயிரங்களுக்கு கொலை செய்யக்கூடிய ஒரு கேங்க்ஸ்டர், எப்படி மில்லியனில் பணம் வாங்குகிற பெரிய கேங்க்ஸ்டராக மாறுகிறான் என்பதுதான் 'வேட்டை மன்னனின்' ஒன் லைன். சிம்புவோடு ஜெய்யும் கைகோர்க்கிறார். இந்தக் கதைக்கேத்த நியாயங்களையும் சொல்றோம். மொத்தத்துல இது ஒரு பவர்ஃபுல்லான ஆக்ஷன் படம்" என்கிறார் அறிமுக இயக்குநர் நெல்சன்.
இவர் இதுவரை யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியது இல்லை. பிரபல சேனல் ஒன்றில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் உள்பட பல ரியாலிட்டி ஷோக்களின் இயக்குநராக இருந்தவர்.



சிம்பு ஓ.கே., இன்னொரு ஹீரோ ஜெய்யும் கைகோர்க்க வேண்டிய அவசியம் என்ன?


கதைப்படி சிம்பு தன்னோட உயிர் நண்பனுக்காக பழிக்குப்பழி வாங்க களத்துல இறங்குவார். இந்தப் பழிக்குப்பழி முயற்சி எப்படி பெரிய வில்லங்கமாக மாறுது என்பதுதான் திரைக்கதை. அந்த நண்பன் கதாபாத்திரத்துக்கு இன்னொரு ஹீரோ அவசியம்.

யாரைக் கேட்கலாம்னு நினைச்சப்பதான் ஜெய் ஞாபகம் வந்துச்சு. கேட்டுப் பார்த்தேன். ஓ.கே.சொன்னார். சிம்புகிட்ட இதைப்பத்தி சொன்னதும், 'அட நம்ம ஜெய்தானே. எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவருக்கு ஓ.கேன்னா தாராளமாக சேர்ந்து நடிக்கலாம்'னு சொன்னார். படத்துல இவங்க ரெண்டு பேருக்கும் முக்கியத்துவம் அதிகமிருக்கும்.


வாழைத்தண்டு மாதிரி தளதளக்கிற இந்த ஹீரோயின் 'தீக்ஷா சேத்'தை எப்படி பிடிச்சீங்க?


தமிழுக்கு ஃப்ரெஷ்ஷா ஒரு நாயகி வேணும்னு நினைச்சு, இண்டர்நெட்ல தேடிப் பார்த்தோம். தீக்ஷா சேத்தை அப்படித்தான் பார்த்தோம். சிம்புகிட்ட சொன்னப்ப, 'அவங்க ஏற்கெனவே தெலுங்குல படம் பண்ணியிருக்காங்க. கேட்டுப் பாருங்க'ன்னு சொன்னார். தீக்ஷாகிட்ட கேட்டப்ப, 'இப்ப எனக்கு ஃபைனல் இயர் பரீட்சை இருக்கு, அப்புறம் பார்க்கலாமே'னு இழுத்தாங்க.
நாங்க ரெடி பண்ணி வைச்சிருந்த நாலு நிமிட டீஸரை போட்டுக் காண்பிச்சோம். அதைப் பார்த்துட்டு கதையைக்கூட கேட்காம 'ஓ.கே நான் வரேன்'னாங்க. தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்திக்கும் கூட கதையைச் சொல்லல. அவரும் டீஸரைப் பார்த்துட்டு எப்போ ஷூட்டிங்னு கேட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த முதல் நாள்தான் தீக்ஷாவுக்கு கதையையே சொன்னேன்.


'வேட்டை மன்னன்' படத்தோட ஹைலைட் என்னவாக இருக்கும்?


திரைக்கதைதான். முதல் பாதி இங்கே நம்மூரிலும், ரெண்டாவது பாதி பிரேஸில் நாட்டிலும் நடக்கிற கதை. பிரேஸிலில் இதுவரை திரையில் பார்க்காத புதுப்புது லொகேஷன்களில் ஷூட் பண்றோம். க்ளைமாக்ஸூக்கு முன்னாடி இருக்கிற சண்டைக்காட்சியில் ரோப் எதுவுமில்லாம, பரபரக்கிற சண்டை இருக்கும். அதுல சீறுகிற சிம்புவுக்கு சபாஷ் போட வைக்கும்.

source  : KUMUTHAM

0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com