ஒரு நல்ல ஹீரோவுக்கு ஆக்ஷன், நடனம் இது இரண்டும்தான் ரொம்ப முக்கியம். சமயத்தில் நடனத்துலக்கூட ஏதாவது கொஞ்சம் மேனேஜ் பண்ணிக்கலாம். ஆனா, ஒரு ஹீரோவோட பரிமாணம் ஆக்ஷன் காட்சிகளில்தான் முழுமையாக வெளிப்படும். அதில் கொஞ்சமும் சமரசம் செய்துகொள்ளாமல் உழைப்பைக் கொடுக்கணும் என்பதுதான் இப்போ என் நோக்கமாக இருக்கிறது’’ – உங்களை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக அடையாளப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறீர்களே என்ற கேள்விக்கு சந்தானம் அளித்த பதில் இது.
வரும் நவம்பரில் ‘சக்கப்போடு போடு ராஜா’, அடுத்தடுத்து,‘சர்வர் சுந்தரம்’, ‘மன்னவன் வந்தானடி’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்று ஹீரோ சந்தானத்தின் நடிப்பு டைரி நிரம்பி வழிகிறது. ‘தி இந்து’வுக்காக அவர் அளித்த விரிவான பேட்டியிலிருந்து…
‘சக்கப்போடு போடு ராஜா’ என்ன மாதிரியான படம்?
காதல், காமெடி, ஆக்ஷன் கலந்த கமர்ஷியல்தான். இரண்டரை மணி நேரம் கவலையை மறந்து இருக்கணும்னுதான் மக்கள் தியேட்டருக்கு வர்றாங்க. அந்த மனநிலைக்கு மருந்து போடுறதுதான் இந்த ஹீரோவோட வேலை. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை கூலா எதிர்கொள்கிற கதாபாத்திரம். இந்தமாதிரிதான் வாழணும்னு நானே ஆசைப்படும் ஒரு கதை.
இந்தப் படத்துக்கு சந்தானம், விவேக் கூட்டணி எப்படிச் சாத்தியமானது?
ஹீரோவா நான் கதைக்குள்ள இருக்குறதால காமெடிக்கு வேற ஒரு நடிகர் தேவை. அப்போ வடிவேலு சார், விவேக் சார் ரெண்டு பேரும்தான் நினைவுக்கு வந்தாங்க. அதுவும் இந்தக் களத்துக்கு விவேக் சார் நல்லாவே பொருந்துவார்னும் தோணுச்சு. கேட்டோம். உடனே ஓ.கே சொன்னார். நானும் - ஆர்யாவும், நானும் - உதயநிதியும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? அந்தமாதிரிதான். எங்க ரெண்டு பேரோட டைமிங் சென்ஸும் படத்துக்குப் பலமா இருக்கும். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் ‘இவ்ளோ நாளா.. விவேக் சாரை மிஸ் பண்ணிட்டோமே’ன்னு நினைக்கவைத்தார்.
உங்கள் நண்பர், உங்கள் படத்தின் இசையமைப்பாளர் சிம்பு என்ன சொல்கிறார்?
‘மன்மதன்’ படத்தில் மலர்ந்த அன்பு. எல்லாக் காலகட்டத்திலும் எனக்கு காட் ஃபாதராக இருப்பது என் நண்பன் சிம்புதான். காமெடியில் இருந்து ஹீரோன்னு வந்ததும், ‘உன் படத்துக்கு நான் இசையமைக்கிறேன்’ என்பதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம். ‘சக்கப்போடு போடு ராஜா’ படத்தோட பாடல்கள் ரொம்ப அருமையாக வந்திருக்கிறது. அக்டோபரில் இசை வெளியீட்டு விழா. என் எல்லாத் தருணங்களிலும் நண்பன் சிம்பு கூடவே இருப்பது எனக்கு மிகப் பெரிய பலம்.
PUBLISHED IN THE HINDU ( TAMIL ) DAILY TAMIL NEWS PAPER DATED 29/9/2017
0 Comments:
Post a Comment