இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் சரிந்து 3 பேர் பலியான சம்பவம் திரையுலகை உலுக்கியது. இந்த விபத்தில் 9 பேர் காயம் அடைந்தனர். கமல்ஹாசன், காஜல் அகர்வால், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்தியன்-2 விபத்தை தொடர்ந்து மற்ற நடிகர்களின் படப்பிடிப்புகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
படப்பிடிப்புக்காக போடப்பட்டுள்ள அரங்குகளின் வலிமை சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. படப்பிடிப்புக்கு அருகிலேயே தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்படுகின்றன. நடிகர்கள் கயிற்றில் தொங்கி சண்டை போடும் காட்சிகளையும் பாதுகாப்பாக எடுக்கிறார்கள்.
இந்த நிலையில் மாநாடு படத்தில் நடிக்கும் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நடிகர்- நடிகை களையும் கேமராமேன், இயக்குனர், உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில் நுட்ப கலைஞர்களையும் ரூ.30 கோடிக்கு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்சூரன்ஸ் செய்துள்ளார்.
இதற்கான காப்பீட்டு பிரிமியம் தொகையாக ஜி.எஸ்.டி. வரி சேர்த்து ரூ.7.8 லட்சம் செலுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. வி.ஜி.பி. தங்க கடற்கரையிலும் முக்கிய காட்சிகளை படமாக்க அரங்குகள் அமைத்து உள்ளனர். படத்தை ஆகஸ்டு மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.
PUBLISHED IN DAILYYTHANTHI DAILY TAMIL NEWS PAPER DATED 26/02/2020
0 Comments:
Post a Comment