சிம்பு இரண்டு ஆச்சர்யங்களை அளித்திருக்கிறார். உடல் மெலிந்து ஆளே மாறியிருப்பது முதல் ஆச்சர்யம் என்றால், ‘சரியாக ஷூட்டிங் வர மாட்டார்’ என்ற செய்தியை முறியடித்து 33 நாள்களில் ‘ஈஸ்வரன்’ படத்தை சுசீந்திரனுக்கு நடித்துக்கொடுத்திருக்கிறார். ஆச்சர்யங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தபடி சுசீந்திரனிடம் பேசினேன்.
`` ‘ஈஸ்வரன்’ எப்படி ஆரம்பிச்சது?’’
“லாக் டெளன்ல ஜெய்யை வெச்சு ஒரு படம் பண்ணினேன். அந்தப் படத்தைத் தயாரிச்ச என் நண்பர் துரைதான் ‘சிம்புவுக்குக் கதை வெச்சிருக்கீங்களா... அவர்கிட்ட பேசலாம்’னு கேட்டார். இருக்குன்னு சொன்னேன். எல்லாமே உடனுக்குடன் நடந்தது. மறுநாளே ஜூம் கால்ல கதை கேட்டார், சிம்பு. 45 நிமிஷம் சொன்னேன். ‘நான் லுங்கி, சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு வில்லேஜ் ஸ்கிரிப்ட் பண்ணி ரொம்ப நாளாகிடுச்சு. கதை ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்கு கடவுள் இந்த ஸ்கிரிப்டைக் கொடுத்த மாதிரி நினைக்கிறேன்’னு ரொம்ப சந்தோஷமா பேசினார். தயாரிப்பாளர் மட்டும் செட்டாகாமல் இருந்தது. உடனே எப்படி ஆரம்பிச்சு ஒரு மாசத்துல படத்தை முடிக்க முடியும், சிம்பு எப்படி வருவார்னு ஏகப்பட்ட கேள்விகள். கடைசியா பாலாஜின்னு ஒரு தயாரிப்பாளர் எங்களை நம்பி முன்வந்தார். இந்தப் படம் உறுதியாகி ஏழு நாளில் ஷூட்டிங் கிளம்பியாச்சு.”
``என்ன மாதிரியான களம்?’’
“பழனி பேக் டிராப்தான். பழனி மாதிரி கோயில்கள் இருக்கிற இடத்துல வி.ஐ.பிகளோ அவங்க குடும்பத்தாரோ கோயிலுக்கு வரும்போது, அவங்களை பத்திரமாக் கூட்டிக்கிட்டுப் போய் சாமி தரிசனம் பண்ணவெச்சு கூட்டிட்டு வர்றதுக்கு சில குரூப் இருப்பாங்க. அவங்களுக்கு அந்தந்த சீசனுக்குதான் வேலை இருக்கும். மத்தபடி அவங்கவங்க ஊர்ல இருப்பாங்க. அப்படியான கேரக்டர்தான் சிம்புவுக்கு. பாரதிராஜா நண்பருடைய மகன் சிம்பு. அவர் பெத்த பசங்க எல்லாம் அவரைப் பார்த்துக்கலை. சிம்புதான்கூட இருந்து பார்த்துக்குவார். அவங்களுக்குள்ள அழகான உறவு இருக்கும். வயசான அந்த மனுஷனுடைய ஆசைகளை சிம்பு எப்படி நிறைவேத்துறார், அவருக்கு வர்ற பிரச்னைகளை எப்படித் தீர்த்து வெக்குறார்னு சின்னச்சின்ன விஷயங்களைத் திரைக்கதையில சேர்த்திருக்கேன். லாக்டெளன்ல நடக்குற கதைதான். இந்தக் குடும்பக் கதையில காதல், காமெடின்னு எல்லாமே இருக்கும். கதைக்குள்ள ஒரு ஆன்மிக மூடு இருந்துகிட்டே இருக்கும். ‘பாண்டியநாடு’, ‘நான் மகான் அல்ல’ படங்களில் இருக்கிற விறுவிறுப்பு கடைசி முக்கால் மணி நேரம் இருக்கும். என்னுடைய படங்களில் மிஸ் பண்ணுன விஷயங்களையெல்லாம் பார்த்துப் பார்த்து இதுல சேர்த்திருக்கேன்.”
``சிம்பு எப்படி உங்களுக்கு ஒத்துழைச்சார்?’’
“சிம்பு ஒரு நல்ல நடிகர். வந்தா ஒரே டேக்தான். நாலு மணி நேரம் ஸ்பாட்ல இருந்தார்னா போதும், ஈஸியா ரெண்டு சீனை எடுத்து முடிச்சிடலாம். தினமும் ஆறரை மணி நேரம் ஸ்பாட்ல இருந்தார். காலையில் 7.30 மணிக்கு ஷார்ப்பா வந்திடுவார். உடம்பைக் குறைச்சு சூப்பரா இருக்கார். ப்ளாஷ்பேக் போர்ஷன்ல செம ஸ்மார்ட்டா இருப்பார். சமீபமா பயங்கர கடவுள் பக்தியோட இருக்கார், சிம்பு. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழனி முருகன் கோயில்னு அந்தச் சுற்றுவட்டாரத்துல இருக்கிற எல்லாக் கோயில்களுக்கும் போயிட்டார். ஷூட்டிங் கடைசி நாள் எல்லோருக்கும் தங்கக்காசு, டிரஸ் எல்லாம் கொடுத்தார். ‘இந்த ஷூட்டிங்கை நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன். ரொம்ப நன்றி’ன்னு சொன்னார்.”
``ஒளிப்பதிவாளர் திரு, இசையமைப்பாளர் தமன்... இந்த ரெண்டு பேருடனும் முதல்முறையா இணைஞ்சிருக்கீங்க. எப்படி இருந்தது?’’
“வேல்ராஜ் சார் சொல்லிதான் திரு சார்கிட்ட பேசினேன். பவுண்டட் ஸ்கிரிப்ட், ஸ்டோரி போர்டுன்னு இயங்குற நபர் திரு சார். ஆனா, நான் அப்படிலாம் இல்லை. பாரதிராஜா சார் பேட்டர்ன். மண்டைக்குள்ள இருக்கிற விஷயங்களை ஸ்பாட்ல எடுப்பேன். இதுக்குள்ள வர்றதுக்கு அவருக்கு ரெண்டு நாளாச்சு. அதுக்கு அப்புறம், பயங்கர வேகம். அதே அளவுக்கு செம குவாலிட்டியா இருக்கும். சிம்புவுடைய ஆஸ்தான இசையமைப்பாளர் தமன். கேட்டதுமே ஓகே சொல்லிட்டார். இன்ட்ரோ சாங், திருவிழா சாங், லவ் சாங், பேமிலி சாங்னு நாலு பாடல்கள். எல்லாமே சூப்பரா வந்திருக்கு.”
``பாரதிராஜா உங்களோட அடுத்தடுத்த படங்களில் பயணிச்சுட்டு இருக்காரே! வேற யாரெல்லாம் நடிச்சிருக்காங்க?’’
“இந்தப் படத்துல சிம்புவோட இதுவரை நடிச்ச யாருமே இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணினேன். அப்படித்தான் இதுக்கான காஸ்டிங் அமைஞ்சது. அப்போ தானாகவே படம் ப்ரெஷாகிடும். நிதி அகர்வால், நந்திதான்னு ரெண்டு ஹீரோயின்கள். அக்கா - தங்கைகளா நடிச்சிருக்காங்க. பாரதிராஜா சாருடைய மருமகனா முனீஷ்காந்த் நடிச்சிருக்கார். அந்தக் கேரக்டர் பார்க்குறவங்களை சர்ப்ரைஸ் பண்ணும். பாலசரவணனுடைய ஹியூமர் பேசப்படும். பாரதிராஜா சாருடன் எனக்கு நாலாவது படம். அதுக்கு நான் பாக்கியம் பண்ணியிருக்கணும்.”
``பாரதிராஜா சிம்புவைப் பத்தி ஏதாவது சொன்னாரா?’’
“அவன் ரொம்ப நல்ல பையன்டா. நானும் நிறைய பேரைப் பார்த்திருக்கேன். எல்லோரும் முகமூடி போட்டிருப்பாங்க. இவன் மனசுல என்ன தோணுதோ அதைப் பேசுறான். அவன் ஏதாவது லேட்டா வந்தான்னா சொல்லு. நான் பேசுறேன்டா’ன்னு சொன்னார். பாரதிராஜா சாருடைய பட அனுபவங்களை அவ்ளோ சுவாரஸ்யமா சொல்லுவார். அதையெல்லாம் ஆர்வமா கேட்டு ஜாலியா சிரிச்சுக்கிட்டிருப்பார் சிம்பு.”
PUBLISHED IN ANANDA VIKATAN TAMIL MAGAZINE 18.11.2020
0 Comments:
Post a Comment