வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படம்தான் இப்போது டாக் ஆஃப் தி டவுன். ‘‘படம் பிரமாதமாக வந்துள்ளது. டைம் லூப் ஜானர். புது முயற்சி. படம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது...’’ கபடமில்லாத சிரிப்புடன் ஆரம்பித்தார் இயக்குநர் வெங்கட்
பிரபு.‘மாநாடு’ மூலம் என்ன சொல்லப்போறீங்க?
1993ல் வெளிவந்த ‘Groundhog Day’ என்ற ஆங்கிலப் படம்தான் உலகின் முதல் கமர்ஷியல் டைம் லூப் படம். அந்தப் படத்தை லண்டனில் இருக்கும்போது பார்த்தேன். அந்தப் படத்தைத் தொடர்ந்து அவ்வகை படங்கள் மிக குறைவாகவே வெளிவந்தது. அப்போது நான் லண்டனில் பள்ளி மாணவன். அந்தப் படம் எனக்கு பிடித்திருந்தது.‘மாநாடு’ எழுதும்போது டைம் லூப் பாணியில் எழுதவில்லை. பொலிட்டிக்கல் த்ரில்லராகத்தான் எழுதினேன். அப்துல் காலிக் என்ற இளைஞனை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை இது. இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்படுவது அல்லது அவர்கள் மீது பழி சுமத்தும் போது மக்கள் உடனே நம்புகின்ற சூழ்நிலை இங்குள்ளது.
பொதுவெளியில் ஏன் அவர்கள் வெகு சீக்கிரத்தில் தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்ற விஷயத்தைச் சொல்ல நினைத்தேன். ஏன் அதை மையமாக வைத்து படம் பண்ணக்கூடாது என்று யோசித்தேன். இந்த ஐடியாவை சிம்புவிடம் சொன்னதும் சூப்பராக இருக்கிறது என்றார். எஸ்.ஜே.சூர்யா கதை கேட்டதும் எழுந்து கட்டிப்பிடித்து வாழ்த்தினார். ஒரே ஒரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால் அப்துல் காலிக்தான் ‘மாநாடு’. எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள். மக்களை நேசித்தாலே போதும். பாதி பிரச்னைகள் ஓடிவிடும். இங்கு மதம், இனம், மொழியால் பிரித்தே வைத்திருக்கிறார்கள். அதைத் தாண்டி நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் படம் சொல்லும் செய்தி.
டைம் லூப் முறை கதை தேர்வுக்கு காரணம் என்ன?
இந்தப் படம் பண்ணும்போதே பொலிட்டிக்கல் படங்களான ‘சர்கார்’, ‘NGK’ வந்தது. என் படத்தை வித்தியாசமாக எப்படி காட்ட முடியும் என்று யோசித்தபோது வந்து விழுந்த ஐடியாதான் டைம் லூப். இந்த மாதிரி ஜானர் பார்க்காத மக்களுக்கு எப்படி புரியவைக்கலாம் என்ற கண்ணோட்டதில் திரைக்கதை எழுதினேன். இதில் நன்றி சொல்லவேண்டியது சிம்புவுக்கு. ஏனெனில் இந்த மாதிரி கதைக்களத்தில் சிம்பு மாதிரி பெரிய ஹீரோ நடிப்பது இதுவே முதல் முறை. மற்ற ஹீரோக்கள் வித்தியாசமான முயற்சியை அவ்வளவாகக் கையாண்டதில்லை. சேஃப் ஜானரில் படம் பண்ணுகிறார்கள்.
இது முழுமையான கமர்ஷியல் படம். வெங்கட் பிரபு படத்தில் என்னவெல்லாம் எதிர்பார்ப்பீர்களோ அவை அனைத்தும் இருக்கும். கூடுதலாக சொல்லப்போகும் விஷயம்தான் டைம் லூப். ஒரே காட்சியை பலமுறை காண்பிப்பது டைம் லூப் முறையாக இருந்தாலும் அதை சுவாரஸ்யமாக காட்டியிருக்கிறோம்.
சிம்பு?
அவருடன் பணியாற்றியதில் எந்த பிரச்னையும் இல்லை. சிறு வயது முதல் சிம்பு எனக்கு பழக்கம். நண்பர் என்பதைத் தாண்டி சகோதரர் மாதிரி பழகுவார். வெல் விஷர். 85 நாட்களில் எடுக்க வேண்டிய படத்தை முன் கூட்டியே முடித்தோம் என்றால் ஹீரோ ஒத்துழைப்பு இல்லாமல் முடியாது. சிம்பு டைரக்டரின் டிலைட். என்ன சொன்னாலும் ஈஸியாக அவரிடம் வேலை வாங்கிவிட முடியும். அவரது பெர்ஃபாமன்ஸ் பேசப்படும். எல்லாமே சிங்கிள் டேக். சிம்பு என்றால் கேமராவைப் பார்த்துப் பேசுவது, விரலைச் சுழட்டுவது எதுவுமே இதில் கிடையாது. நம்முடைய சக மனிதனாக இருப்பார். அடி வாங்குவார். சிரிப்பு, அழுகை என்று எல்லாமே கலந்தவன்தான் அப்துல் காலிக்.
எஸ்.ஜே.சூர்யாவுக்குத்தான் பில்டப் அதிகம். வில்லனை பெரிதாகக் காட்டியுள்ளேன். இவ்வளவு பெரிய வில்லனை எளிமையான ஹீரோ எப்படி ஜெயிக்கப்போகிறான் என்பது யூகிக்க முடியாதளவுக்கு இருக்கும். இது ஆடியன்ஸை உற்சாகப்படுத்தும்.
எஸ்.ஏ.சி., எஸ்.ஜே.சூர்யா போன்ற இயக்குநர்களுடன் பணியாற்றிய அனுபவம்?
எஸ்.ஏ.சி. சாரை ரொம்ப நேரம் காக்க வைக்கக்கூடாது என்று வேகமாக எடுத்தாலும் ‘நான் இருக்கிறேன் பிரபு’ என்று சொல்வார். இயக்குநராக இருந்து நடிக்க வந்ததால் இயக்குநரின் வலி தெரியும். ஃபிரேமில் அவருடைய அனுபவத்தை பார்த்து ரசித்திருக்கிறேன். எஸ்.ஏ.சி.சார் என்னை சிறிய வயதிலிருந்து பார்த்து வருகிறார். சார் படங்களுக்கு அப்பா இசை அமைத்திருக்கிறார். அப்பாவுடைய கச்சேரியில் ஷோபா மேடம் சிங்கர்.
எஸ்.ஜே.சூர்யா வில்லனாக வர்றார். ‘ஃபேஸ் ஆஃப்’ படம் மாதிரி சொல்லலாம். எதையும் நேர்த்தியாக செய்யக்கூடியவர். அவரிடம் மெனக்கெடல் அதிகம் இருக்கும். ஷாட்ல டவுட் வந்துவிட்டால் ஒன்ஸ் மோர் போகலாம் என்று கெஞ்சி கேட்பார். நன்றாக இருந்தாலும் அவர் இறங்கி வந்து கேட்கும்போது மறுக்க முடியாது. அவருடைய எனர்ஜி லெவல் வேற லெவல்.
இவர்களுடன் ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி, கருணாகரன், மனோஜ் பாரதிராஜா, அஞ்சனா கீர்த்தி, டேனி, படவா கோபி இருக்கிறார்கள். அனைவரும் கேரக்டராக வாழ்ந்திருப்பார்கள்.
இயக்குநர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி ?
சினிமா குடும்பத்துல இருந்து வந்தவங்க. ஆர்ட் டைரக்ஷன் டிபார்ட்மென்ட்ல வேலை பார்த்தவர். சின்சியர் ஆர்ட்டிஸ்ட். இது லவ் படம் கிடையாது. சீதாலட்சுமி என்ற முக்கியமான லீட் ரோலில் வர்றார்.
உங்கள் தம்பி யுவன் இசை எப்படி வந்துள்ளது?
என்னுடைய எல்லா படத்திலும் அவர்தான் ஹீரோ என்று சொல்வேன். படத்துல ஒரு பாடல் மட்டுமே. பின்னணி இசையில் பல வெரைட்டி கொடுத்துள்ளார். பிஜிஎம் ஸ்கோரே தனி ஆல்பம் தயாரிக்குமளவுக்கு வந்துள்ளது. படம் பார்க்கிற எல்லாரும் ‘யுவன் பின்னிட்டார்’னு சொல்வாங்க.
உங்கள் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் இதில் இல்லையே?
ஆமாம், இதில் சக்தி சார் பண்ணலை. ரிச்சர்ட் எம்.நாதன் பண்ணியிருக்கிறார். அதே மாதிரி ஆர்ட் டைரக்டர் உமேஷ். புது காம்பினேஷன். படம் பேசப்படுகிறது என்றால் இவர்கள் இரண்டு பேருக்கும் பங்கு இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் இந்த கதைக்கு என்ன தேவையோ அதை சரியாகப் பண்ணியிருக்கிறார். குறைந்த நாட்களில் படம் முடிக்க அவரும் காரணம். எக்கனாமிக்கலாக பண்ணுவதற்கு உதவியாக இருந்தார். ஃப்ளைட் சீக்வன்ஸ் எடுக்க நான்கு நாட்கள் கேட்டோம். இரண்டு நாட்கள்தான் அனுமதி கிடைத்தது. ஆச்சர்யப்படுமளவுக்கு குறுகிய நேரத்தில் லைட் பண்ணி குவாலிட்டி மிஸ்ஸாகாமல் எடுத்தார்.
எடிட்டர் பிரவீனுக்கு 100 வது படம். என்னுடன்தான் முதல் படம் பண்ணினார். அவருடைய வளர்ச்சி பிரம்மாண்டம். பல மொழிகளில் பண்ணுகிறார். அவர் ஒர்க் எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும். அதை மிஸ் பண்ணாமல் கொடுத்துள்ளார்.ஃபைட் மாஸ்டர் சில்வா, ‘சரோஜா’வில் இருந்து டிராவல் பண்ணுகிறார். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள படம். இரண்டாவது யூனிட் இயக்குநர் மாதிரி சின்சியராக ஒர்க் பண்ணியிருக்கிறார்.தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் பிரம்மாண்ட தயாரிப்பாளர்.
ஹாலிவுட் இன்ஸ்பிரேஷனில் படம் எடுக்கும் நீங்கள், ஹாலிவுட் ஸ்டைலில் ப்ரீ புரொடக்ஷன் செய்து படத்தை திட்டமிட்ட நாட்களில் முடிப்பதில்லையே?
அதற்கு இயக்குநர்கள் மட்டும் ஆசைப்பட்டால் போதாது. தயாரிப்பாளர்களின் ஒத்துழைப்பு தேவை. ஓர் இயக்குநர் ஒரு வருடம் ப்ரீ புரொடக்ஷனுக்கு அவகாசம் கேட்கிறார் என்றால் அதற்கு தயாரிப்பாளர் செலவு பண்ண முன்வரவேண்டும். இங்கு அடுத்த வாரம் போயிடலாமா, அடுத்த மாதம் போயிடலாமா என்ற நிலையில்தான் சினிமா உள்ளது. இந்த அவசர நிலையை குறை சொல்வதற்குமில்லை.
ஏனெனில் முதலீடு, வட்டி, ஹீரோ கால்ஷீட் என்று பல விஷயங்கள் இருக்கிறது. ஹாலிவுட்டில் ப்ரீ புரொடக் ஷனை முறையாக பண்ணுகிறார்கள். பாலிவுட்டில் ப்ரீ புரொடக்ஷன் ஸ்டைலில் படம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். ஆர்டிஸ்ட்டுக்கான ரிகர்சல், பல மாதங்களுக்கு முன் லொகேஷன் பார்ப்பது என்று இயக்குநரின் எதிர்பார்ப்புக்கு தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தால் ஹாலிவுட் ஸ்டைலில் பண்ணலாம்.
உங்கள் அப்பா மண் சார்ந்த படங்கள் செய்துள்ளார். உங்கள் சிஷ்யர் பா.ரஞ்சித் சீரியஸ் படங்கள் செய்து வருகிறார். நீங்கள் ஜாலியான படங்களை மட்டுமே செய்து வருகிறீர்கள். சிரீயஸ், மண் சார்ந்த படங்களை எப்போது உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாம்?
உண்மை. நான் மண் சார்ந்து படம் பண்ணியதில்லை. அப்பா வளர்ந்த விதம் அது மாதிரி. நான் சிட்டி பையன். லண்டனில் படிச்சேன். நான் பார்த்தவைகளை சொல்ல ஆசைப்பட்டேன். அப்பா அவர் பார்த்த விஷயங்களை வைத்து ‘கரகாட்டக்காரன்’ மாதிரி படம் கொடுத்தார். மண் சார்ந்த விஷயங்களை சொல்ல இயக்குநர் பாண்டிராஜ் இருக்கிறார். நான் அந்த மாதிரி படம் பண்ணணும் என்றால் பாண்டிராஜ், வெற்றிமாறன், பா.ரஞ்சித் போன்ற இயக்குநர்களிடமிருந்து கதை வாங்கி பண்ணணும். அந்த கதைகளுக்கு நான் திரைக்கதை எழுதி இயக்க முடியும். அவர்கள் கதையை கையில் எடுத்து என்னுடைய ஸ்டைலில் பண்ண முடியும்.
சினிமாவில் பல இயக்குநர்கள் பல நல்ல முயற்சிகள் பண்ணுகிறார்கள், அது தொடரட்டுமே. நான் அதில் இறங்கினால் புலியைப் பார்த்து சூடு போட்ட பூனை மாதிரி ஆகிவிடும். இப்போது நான் சீரியஸ் மண் சார்ந்த கதை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்கு எப்போது உயிர் வருதுன்னு பார்க்கலாம்.
அடுத்து?
எக்ஸ்பெரிமென்ட் ஆக ஒரு படம் முடித்துள்ளேன். என்னுடைய உதவியாளர் மணிவண்ணனின் கதை. முதல் முறையாக வெளியில் இருந்து வாங்கி பண்ணுகிறேன். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. சீக்கிரத்தில் வெளியீடு இருக்கும். தெலுங்கிலும் ஒரு படம் பண்ணுகிறேன்.
- எஸ்.ராஜா
PUBLISHED IN KUNGUMAM WEEKLY TAMIL MAGAZINE DATED 28.11.2021
0 Comments:
Post a Comment